கேரளாவில் இருந்து கோவை வாளையாறு சோதனைச்சாவடி வழியாக, எவ்விதமான சோதனையும் இல்லாமல் தமிழகத்துக்குள் வரும் வாகன ஓட்டுநர். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வாளையாறு சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் சுணக்கம்: தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் கருத்து

டி.ஜி.ரகுபதி

தமிழக - கேரள எல்லையான, வாளையாறு சோதனைச்சாவடியில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், அதனால் தொற்று பரவும் வாய்ப்புஉள்ளதாகவும் சமூக செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடி வழியாக தினமும் ஏராளமானோர் கோவைக்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, அரசின் உத்தரவைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு வாளையாறு சோதனைச்சாவடி பகுதியில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. வாளையாறு சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர், அவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் உடல்வெப்ப நிலை, இ-பதிவு ஆகியவற்றை பரிசோதித்து, அவர்களுக்குகாய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதா எனக் கேட்டறிந்து வந்தனர். தமிழகத்தில் இரண்டாம் அலை ஓய்ந்துள்ள நிலையில், தற்போது கோவையில் தினமும் சராசரியாக 150 முதல் 180 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், கரோனாதொற்று பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளது. தினமும் அங்கு தொற்று உறுதி செய்யப்படுபவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும்முக்கிய வழித்தடமான வாளையாறில் கண்காணிப்புப் பணி முழுமை யாக மேற்கொள்ளப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘கேரளாவில் தற்போது தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இச்சூழலில், முக்கிய வழித்தடங்களான வாளையாறு, வேலந்தாவலத்தில் கண்காணிப்புப் பணியை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்த வேண்டும். ஆனால், இங்கு அமைக்கப்பட்ட குழுவினர் முறையாக வாகனங்களை கண்காணிப்பது இல்லை. கேரளாவில் இருந்து பாலக்காடு வழியாக பேருந்தில் வரும் பயணிகள், வாளையாறில் இறங்குகின்றனர். அங்கு இருக்கும் தமிழக பேருந்தில் அவர்கள் ஏறி, கோவைக்குள் நுழைகின்றனர். அவ்வாறு தமிழக பேருந்தில் ஏறுபவர்களிடம் சுகாதாரத் துறையினர், காவல்துறையினர் இ-பாஸ் ஆய்வு, சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி குறித்த ஆய்வு,வெப்ப நிலை ஆய்வு போன்றவற்றை மேற்கொள்வது இல்லை.அவர்களில் யாராவது ஒருவருக்கு தொற்று இருந்தாலும், மற்றவர்க ளுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

குழு அமைக்கப்படும்

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறும்போது, ‘‘கோவையில் வாளையாறு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப் புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்துவருபவர்களிடம் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தாமல், அவர்களிடம் இ-பதிவு உள்ளதா என ஆய்வுசெய்து, சளி, காய்ச்சல், அறிகுறி குறித்து கேட்டறியப்பட்டு, உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. வாளையாறு பகுதியில் தமிழகபேருந்து நிறுத்தும் பகுதியிலும் மருத்துவக் குழு புதிதாக அமைக்கப்பட்டு, கேரளாவில் இருந்து வந்துதமிழக பேருந்தில் ஏறும் பயணிகளின் உடல்நிலை குறித்தும், இ-பதிவு வைத்துள்ளனரா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT