தமிழகம்

ஜெயலலிதா படம் அகற்றப்பட்ட வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் விஜயகாந்த் சரண்

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் படம் அகற்றப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 28-ம் தேதி தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே பயணிகள் நிழற்குடையில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் அகற்றினர். இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ரங்கசாமி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில், முதற்கட்டமாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ள 8 பேரில் விஜயகாந்தை தவிர 7 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர். தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகாந்த் முன் ஜாமீன் பெற்றார். அப்போது, முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி பிரகாஷ், 15 நாட்களுக்குள் வழக்கு நடைபெறும் தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்து, இரு தனிநபர் ஜாமீன் தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தஞ்சை முதலாம் எண் நீதிமன்றத்தில் நேற்று பகல் 12 மணிக்கு விஜயகாந்த் சரணடைந்து, இரு தனிநபர் ஜாமீன் வழங்கினார். நீதிபதி எம்.மூர்த்தி ஜாமீனை ஏற்றுக்கொண்டு, விஜயகாந்த் சரணடைந்ததை பதிவு செய்தார். தொடர்ந்து, மறுதேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போலீஸார் குவிப்பு

விஜயகாந்த் நீதிமன்றத்துக்கு வந்ததை முன்னிட்டு தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கூடினர். விஜயகாந்த் வந்ததும் அவரது காரை ஏராளமானோர் சூழ்ந்ததால், அவர் காரில் இருந்து இறங்க பெரும் சிரமப்பட்டார். பின்னர், நீதிமன்றத்துக்குள் விஜயகாந்த் சென்றதும், நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் செல்போனில் அவரை தொடர்ந்து படம் எடுத்தனர். போலீஸாரும் அதிகளவில் குவிக்கப் பட்டிருந்ததால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

SCROLL FOR NEXT