படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

கழிவு நீர் கால்வாய்களைத் தூர்வார ரூ.8 கோடியில் ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் வாங்க மதுரை மாநகராட்சி திட்டம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியில் புதர் மண்டி, கழிவு நீரும், குப்பைகளையும் மக்கிக் கிடக்கும் மழைநீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய்களையும் துல்லியமாக தூர்வார ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரம் ரூ.8 கோடியில் வாங்கப்படுகிறது.

இந்த இயந்திரத்தை வாங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்தின் (சிஎம்ஏ) அனுமதி பெற பரிந்துரை அனுப்பியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குட்டப்பட்ட பகுதியில் 30க்கும் மேற்பட்ட மழைநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்கள் அனைத்திலும் புதர் மண்டி, குப்பைகள் நிறைந்து கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது.

கால்வாயை சுற்றிலும் வசிக்கும் குடியிருப்போர், தனியார் நிறுவனத்தினர் நிரந்தரமாக குப்பைகள் இந்தக் கால்வாய்களில் கொட்டி வருகின்றனர். ஆண்டுக் கணக்கில் தூர்வாரப்படாமல் புதர் மண்டி, மழைக்காலங்களில் மழைநீர், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புபகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மதுரையில் கொசுத் தொல்லை மக்களை வாட்டி வதைக்கிறது.

இதனால், தொற்று நோய்களும் பரவி மக்கள் உடல் ஆரோக்கியமும், நிம்மதியும் பறிபோகிறது. இந்த கால்வாய்களில் தூய்மைப் பணியாளர்கள் இறங்கி தூர்வாருவது, சுத்தம் செய்வது சவாலான காரியம்.மேலும், உச்ச நீதிமன்றமும் கழிவு நீர் கால்வாய்களில் மனிதர்களை இறக்கி வேலை செய்யக்கூடாது என்று கூறியுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சிப் பள்ளியில் இந்தக் கால்வாய்களை எளிதாக தூர்வாரமும், மண், புதர் உள்ளிட்டவற்றை தோண்டி அள்ளவும் ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் (excavato2r) இயந்திரம் ரூ.8 கோடியில் வாங்கப்படுகிறது.

இதற்காக மத்திய அரசின் ஸ்வேட் பாரத் திட்டத்தின் திட்டத்தின் கீழ் இந்த இயந்திரத்தை வாங்க மதுரை மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்தின் (சிஎம்ஏ) அலுவலகத்திற்கு அனுமதி பெற பரிந்துரை அனுப்பியுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், இயந்திரம் வாங்குவதற்கு மாநகராட்சி நடவடிக்க எடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் கூறியதாவது;

கால்வாய்களில் ஆகாயத்தாமரை அதிகளவு படர்ந்துவிட்டது. குப்பைகளும் நிறைந்துவிட்டதால் அவற்றை அள்ளவும், செடி, கொடி புதர்களை எளிதான முறையில் அகற்றவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால், கால்வாய்களை தூர்வாரவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் (robotic excavator) இயந்திரம் வாங்கப்படுகிறது.

இந்த இயந்திரத்தால் பெரிய கால்வாய்கள், சிறிய கால்வாய்களை எளிதாக தூர்வாரலாம். இந்த இயந்திரம் சக்கரங்கள் மூலம் எளிதாக ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து சென்று கால்வாய்களைத் தூர்வார உதவுகிறது.

நகரில் உள்ள கால்வாய்களை புதர் மண்டவிடாமல் தொடர்ந்து இந்த இயந்திரத்தை கொண்டு தூர்வாரி நகரில் மழைநீர், கழிவு நீர் தேங்க விடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT