திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், புதிய குடும்ப அட்டை வழங்கிய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி.  
தமிழகம்

தமிழகத்தில் இதுவரை மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது: உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி 

பி.டி.ரவிச்சந்திரன்

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்ததில் மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மனுக்களுக்கு ஆணைகள் வழங்குதல் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் நலஇணை ஆணையர் என்.கோவிந்தன் வரவேற்றார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தில் 1845 மனுக்கள் பெறப்பட்டதில் 891 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 266 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. நிராகரிக்கப்பட்ட 668 மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன், சிறுதொழில் கடன் ஆகியவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சியில் அனைத்து பணிகளும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுகிறது" என்றார்.

உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், "குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்ததில் மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் பொருட்கள் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT