தமிழகம்

பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

அ.முன்னடியான்

பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த தேசியப் பால்வள வாரியத்துடன் தொழில்நுட்ப மற்றும் கட்டுமான ஒப்பந்தம் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

புதுச்சேரி கூட்டுறவு நிறுவனமான பான்லேவில் பால், தயிர், நெய், ஐஸ்கிரீம் ஆகிய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பாண்லே நிறுவன பார்லர்கள் மற்றும் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்பொழுது பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பால் பொருட்களையும் பாண்லே நிறுவனம் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது.

புதுச்சேரியில் பல்வேறு நிறுவனங்களின் பால் விற்பனை செய்யப்பட்டாலும் மக்களின் முதல் தேர்வாக, அரசின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே பால்தான் இருந்து வருகிறது. இதன் காரணமாகப் புதுச்சேரி மக்களிடத்தில் தனி இடத்தை பாண்லே நிறுவனம் பெற்றுள்ளது.

அந்த வரிசையில் அமுல் ஐஸ்கிரீம் வகைகளையும் பாண்லேவில் உற்பத்தி செய்து தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதன் உற்பத்தித் திறன் 10 ஆயிரம் லிட்டரில் இருந்து 20 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்படுகிறது.

இதற்கான தேசியப் பால்வள வாரியத்துடன் தொழில்நுட்ப மற்றும் கட்டுமான ஒப்பந்தம் சட்டப்பேரவையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் இன்று (ஜூலை 30) கையெழுத்தானது. இதில் தேசியப் பால்வள வாரியத்தின் மண்டலத் தலைவர் ராஜீவ், அலுவலர் விநாயகம், புதுச்சேரி கூட்டுறவுப் பதிவாளர் முகமது மன்சூர், பால்வள அபிவிருத்தி அதிகாரி குமாரவேல், பாண்லே மேலாண் இயக்குநர் சுதாகர் மற்றும் பாண்லே அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT