தமிழகம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட 5,200 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி திமுக அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு காரணமாக ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. இருப்பினும் அதிமுகவினர் அறிவித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் வீட்டின் முன்பு அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல, சூரமங்கலத்தில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம், தெற்கு தொகுதியில் எம்எல்ஏ பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் 78 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, அனுமதியின்றி கூட்டம் கூடியது, அரசின் விதிகளைக் கடைபிடிக்காதது, பேரிடர் காலத்தில் அரசின் விதிமுறைகளை மீறியது, தொற்று பரவிட காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் முன்னாள் முதல்வர் பழனிசாமி, எம்எல்ஏ-க்கள் உட்பட மாவட்டம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் 5,200 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT