சிவகங்கை மாவட்டம் இளையான் குடியைச் சேர்ந்த கொங்கன் மகன் ஹர்ஷத்(33). இவர் மதுரை வில்லாபுரத்தில் பேக் கடை ஒன்றில்
3 ஆண்டாக டெய்லராக பணியாற்றினார். தனது முதலாளியின் உதவியோடு சொந்த ஊரில் பேக் கடை திறக்க ஏற்பாடு செய்தபோது அவரது முதலாளி ரூ.4 லட்சம் கடன் கொடுத்தார்.
மேலும் ரூ.5 லட்சம் தேவைப்பட்டதால் இத்தொகையை திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியிடம் ஹர்ஷத் கடன் கேட்டிருந்தார். இதற்காக, அவரை நாகமலை புதுக்கோட்டை மாவு மில் அருகே கடந்த 5-ம் தேதி சந்தித்தார். அப்போது, ஏற்கெனவே தனது உறவினர்களிடம் வாங்கியிருந்த ரூ.10 லட்சத்தையும் ஹர்ஷத் கையில் வைத்திருந்தார்.
இந்நிலையில், ரூ.5 லட்சம் கடனுக்கான ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிச் சென்ற பாண்டி, தனது நண்பர்களான கார்த்திக், உக்கிரபாண்டி, பால்பாண்டி ஆகியோருடன் திரும்பி வந்தார். சிறிது நேரத்தில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தியும் காரில் அங்கு வந்தார். அவர் ஹர்ஷத்திடம், உங்கள் மீது புகார் உள்ளது, காவல் நிலையத்துக்கு வாருங்கள் எனக் கூறிவிட்டு, அவர் வைத்திருந்த பணப் பையை வாங்கிக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஹர்ஷத் காவல் நிலையம் சென்று ரூ.10 லட்சம் வைத்திருந்த பேக்கை கேட்டு கெஞ்சியபோது அதைத் தராமல் அலைக்கழிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹர்ஷத் மதுரை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் அளித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திர மவுலி மேற்கொண்ட விசாரணையில், டெய்லர் ஹர்ஷத்திடம் ரூ.10 லட்சத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வசந்தி உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரை பிடிக்க, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்
பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் வசந்தி தலைமறைவாகிவிட்டதாகவும், தொடர்ந்து அவரைத் தேடுவதாகவும் தனிப்படையினர் தெரி
வித்தனர். இதற்கிடையே, வசந்தி முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது.