தமிழகம்

திரைப்படப் பயிற்சி நிறுவனம் உலக தரத்துக்கு மேம்படுத்தப்படும்: செய்தித் துறை அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

தரமணியில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை, நேற்று மாலை அமைச்சர் சாமிநாதன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முன்காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம், மாணவர்கள் படப்பிடிப்புத் தளம், மாணவர் தங்கும் விடுதி, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் பிரிவு மற்றும் வளாகத்தில் அமைந்துள்ள ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மறு ஒலிப்பதிவு திரையரங்கில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், ‘‘கடந்த ஜூலை 27-ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், செய்தித் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வப் பணிகளையும், தொலைநோக்குத் திட்டங்களையும் வகுக்க வேண்டும். ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இங்குள்ள வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிறுவனத்தை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து உலகத்தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா, தமிழ்வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT