புதுச்சேரி ஐஎன்டியூசி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரனின் உருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய அகில இந்திய ஐஎன்டியூசி தலைவர் சஞ்சீவரெட்டி. அருகில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுவை மாநில ஐஎன்டியூசி தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் உள்ளனர். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

தொழிலாளர்கள் நலன் பேணும் விஷயங்களில் மத்திய அரசு தவறான கொள்கைகளை கடைபிடிக்கிறது: ஐஎன்டியூசி தேசியத் தலைவர் சஞ்சீவ ரெட்டி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தொழிலாளர்களின் நலன் பேணும் விஷயங்களில் மத்திய அரசு தவறான கொள்கைகளை கடைபிடிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கிறது என்று ஐஎன்டியூசி அகில இந்தியத் தலைவர் சஞ்சீவரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி சங்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் அகில இந்திய தலைவர் சஞ்சீவ ரெட்டி கலந்து கொண்டு, படத்தை திறந்து வைத்தார். தமிழக மாநிலத் தலைவர் ஜெகநாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். புதுவை மாநிலச் செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார்.

ஐஎன்டியூசி மாநிலத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் நரசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஎன்டியூசி அகில இந்திய தலைவர் சஞ்சீவ ரெட்டி கூறியதாவது:

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று லாபம் தரும் நிறுவனங்கள்; மற்றொன்று இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள். இவற்றில், இழப்பை ஏற்படுத்துகின்ற நிறுவனங்களை தனியார் பங்களிப்புடன் சீர்படுத்தலாம். லாபம் ஈட்டும் நிறுவனங்களை மத்திய அரசு மூடுவது ஏற்புடையதல்ல.

இதனை ஐஎன்டியூசி உள்ளிட்டஅனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன.அண்மையில், மத்திய அரசு விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட்டை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. அனைத்து ஸ்டீல் பிளான்ட்டுகளும் கடந்த ஓராண்டாக நன்றாகவே இயங்குகின்றன. ஆனால், நஷ்டம் எனக்கூறி தனியாரிடம் ஒப்படைக்கின்றனர்.

ஊழியர்களை முடக்குகின்றனர்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து, ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கின்றனர். ‘நிரந்தர ஊழியருக்கு மாதம் ரூ.1 லட்சம் அளவில் ஊதியம்’ என்ற நிலையை மாற்றி, ஒப்பந்த ஊழியருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து முடக்குகின்றனர். ஊழியர்களின் ஊதியத்தைக் குறைப்பது வேதனையைத் தருகிறது.

30 சதவீதம் நிரந்தர ஊழியர்கள், 60 சதவீதம் ஒப்பந்த ஊழியர்கள் என்ற நிலையை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதை ஐஎன்டியூசி வலியுறுத்துகிறது.

தொழிலாளர்கள் நலன் பேணும் விஷயங்களில் மத்திய அரசு தவறான கொள்கைகளை கடைபிடிக்கிறது. ரயில்வே, நிலக்கரி, காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது. பொதுத்துறை தனியார்மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கை மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆகஸ்ட் 7-ம் தேதி டெல்லியில் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து போராட உள்ளோம் என்று தெரிவித்தார்.

நாராயணசாமி கடும் ஆதங்கம்

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் கிரண்பேடியை 5 ஆண்டு காலம் ஆளுநராக நியமித்து அனைத்து திட்டங்களையும் முடக்கினர். இதையெல்லாம் எதிர்த்து போராடினோம்.

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி என பலரது போன்களையும் ஒட்டு கேட்டுள்ளனர். 2019-ல்கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோரின் உதவியாளர் செல்போன்களை ஒட்டு கேட்டிருக்கிறார்கள். 147 செல்போன் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன. செல்போன் ஒட்டு கேட்புக்கு 8 லட்சம் டாலர் கொடுத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் ஆட்சி கவிழ்க்கும்போது என்னுடைய செல்போனையும் ஒட்டு கேட்டிருப்பார்கள்.

புதுச்சேரியில் தற்போது, 10 ஆயிரம் பேருக்கு புதிதாக பென்ஷன் கொடுக்கிறார்களாம். இதற்கான நிதி, காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்து ஒதுக்கப்பட்டது. அப்போது கிரண்பேடி தடுத்து நிறுத்தியதற்கு, இப்போது ஒப்புதல் தருகிறார்கள். புதுச்சேரியில் ஒரு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT