முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளனுக்கு பரோல் வழங்கும் போது, அதே வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை பரோலில் விடுதலை செய்யக் கோரி அவ ரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் பரோல் விடுமுறை கேட்டு சிறை அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. எனவே ரவிச்சந்திரனை 2 மாதம் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கே.கல்யாண சுந்தரம், பி. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிடுகையில், மத்திய அரசு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை ரவிச்சந்திரன் நிறைவு செய்து விட்டார். இதனால் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க மாநில அரசே முடிவு செய்யலாம் என்றார்.
மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்ப தாவது:
மனுதாரர் பரோல் வழங்குவதை சட்டப்பூர்வ உரிமையாக கேட்க முடியாது. பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவதை மனுதாரர் மகனின் பரோல் கோரிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.
பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் மகன் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்றொருவருக்கு பரோல் வழங்கும்போது, மனுதாரரின் மகனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.