தமிழகம்

அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றுவார்: அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி

ந. சரவணன்

தேர்தலின்போது மக்களுக்கு திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்து வரும் திட்டப்பணிகளை அத்துறையின் அமைச்சர் பெரியகருப்பன் இன்று (ஜூலை.29)நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், அத்தனாவூரில் தனியார் மண்புழு உர உற்பத்தி மையச் செயல்பாடு, ஜோலார்பேட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பாடு, குடிநீர் திட்டப்பணிகள், நாட்றாம்பள்ளி யூனியன் மல்லகுண்டா ஊராட்சியில் நடந்த வரும் மரக்கன்று வளர்ப்பு, தீவனப் பயிர் உற்பத்தி மற்றும் நீர் உறிஞ்சிக் குழிகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வரவேற்றார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கோபால், மகளிர் திட்ட மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் பல்லவிபல்தேவ் ஆகியோர் திட்டப் பணிகள் குறித்து விளக்க உரையாற்றினர். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமை வகித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:

‘‘தேர்தலின் போது மக்களுக்கு திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நம்பிக்கை தமிழக மக்களிடம் உள்ளது. மக்களிடம் எங்களுக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற அலங்கோல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்து திறமையான, ஆரோக்கியமான நிர்வாகத்தை நடத்த முயற்சி நடந்து வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், அதிகாரிகள் மூலமாக ஆய்வு நடத்தி, நிர்வாகத்தைச் சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வுகள் அரங்கத்தில் மட்டுமே நடக்கும் ஆய்வுகளாக இருக்காமல், பணி நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று, அரசு திட்டப்பணிகள் தேக்கமடையாமல், முன்னேற்ற பாதையில், விரைவாக நடக்க, எதிர்காலத்தில் எந்தவிதமான முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற ரீதியில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிவுரைகளை அரசு அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறோம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நிறை, குறைகள் இருந்தன. குறைகளைச் சீர்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சில பணிகள் தொடங்காமல் இருந்தன. அவற்றை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடிக்கப்படும்.

கடந்த 2006 முதல் 2011 வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது எந்த அளவுக்குத் தமிழகம் வளர்ச்சியைப் பெற முடிந்ததோ அந்த அளவிற்கு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும்.

பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கடந்த 1989-ம் ஆண்டு தருமபுரியில் மறைந்த முதல்வர் கருணாநிதி மகளிர் சுய உதவி குழுக்களைத் தொடங்கினார். ஆரம்பத்தில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்ட கடனுதவி இன்று ரூ.15 லட்சம் கடன் பெறும் வகையில் உயர்ந்து நிற்கிறது. பெண்களின் வாழ்வாதாரமும் இதன் மூலம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பேரிடர்க் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கிராமப்புற மக்களின் தொழில் மேம்பாட்டுக்காக அனைத்து மாவட்டங்களிலும் ‘தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவானதால் இங்கும் அத்திட்டம் படிப்படியாக விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயரும். குறிப்பாக மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, விவசாயப் பணிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஈடுபடுத்தும் திட்டமும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களிலும் கரோனா போன்ற பெரு நெருக்கடி இருந்தபோதும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்கில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்டும் பல இடங்களில் பணிகள் தொடங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அவை குறித்து ஆய்வு நடத்தி விரைவில் தொடங்கப்படும்.’’

இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT