கு.பரசுராமன்: கோப்புப்படம் 
தமிழகம்

தஞ்சாவூர் திமுக நிர்வாகிகளைச் சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி.: விரைவில் ஸ்டாலின் தலைமையில் இணையவுள்ளதாகத் தகவல்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளை அதிமுக முன்னாள் எம்.பி. கு.பரசுராமன் சந்தித்துள்ளார். விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவர் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் (2014-2019) உறுப்பினராக இருந்தவர் கு.பரசுராமன். இவர், அதிமுகவில் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார்.

2014-ம் ஆண்டு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வைத்திலிங்கம் சிபாரிசில் சீட் வாங்கி பரசுராமன் வெற்றி பெற்றார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, தஞ்சாவூர் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்ததில், வைத்திலிங்கத்தின் பங்கு அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட கு.பரசுராமன் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அறிவுடைநம்பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தேர்தல் நேரத்தில் களப் பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தார். இதனால் வைத்திலிங்கத்துக்கும் பரசுராமனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி இரவு செய்தியாளர்களைச் சந்தித்த கு.பரசுராமன், திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து ஆட்சி சிறப்பாக உள்ளது எனக் கூறினார். இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், இன்று மதியம் (ஜூலை 29) பரசுராமன் தனது ஆதரவாளர்களோடு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தார்.

திமுக நிர்வாகிகளைச் சந்தித்த கு.பரசுராமன்.

அங்கு மாவட்டச் செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளைச் சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், "வைத்திலிங்கத்தின் ஆதரவாளரான பரசுராமன் கடந்த சில தினங்களுக்கு முன் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். அவரது தலைமையில் திமுகவில் சேருவதற்காக மாவட்டச் செயலாளரிடம் நேரம் கேட்டுதான் கட்சி அலுவலத்துக்குத் தனது ஆதரவாளரோடு வந்தார். விரைவில் அவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளார்" என்றனர்.

SCROLL FOR NEXT