கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம் 
தமிழகம்

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றி: மார்க்சிஸ்ட்

செய்திப்பிரிவு

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டினை அறிவித்திருப்பது, பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை மத்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துக்கொண்டது. இந்த இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை இதுவரையில் மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு பறிபோய்விட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும், இதுகுறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்க வேண்டுமெனவும் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை அமல்படுத்தாத நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த ஆண்டுக்குள்ளாவது உத்தரவை நிறைவேற்றிட வற்புறுத்தினோம். சென்னை, உயர் நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இளங்கலை படிப்பிலும், முதுகலை படிப்பிலும், உயர்தனி வகுப்புகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

கடந்த பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி இது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதேசமயம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமலாக்க வேண்டுமென்கிற அடிப்படையில், தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென நீதிமன்றத்தில் வற்புறுத்தியுள்ளோம்.

தற்போது மத்திய அரசு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்ற போதிலும், தொடர்ந்து 50 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT