தமிழகம்

தடுப்பூசி செலுத்தியிருந்தால் உதகை சுற்றுலா விடுதியில் கட்டணச் சலுகை 

ஆர்.டி.சிவசங்கர்

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில், தடுப்பூசி செலுத்தியிருந்தால் விடுதிக் கட்டணத்தில் சலுகை என்று உதகையில் உள்ள தங்கும் விடுதி அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரிதும் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் தொழில்தான். சுற்றுலாவை நம்பியே உள்ள நீலகிரி மாவட்டம் கடந்த இரு ஆண்டுளாக முடங்கியுள்ளது. சுற்றுலாத் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்துள்ள சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்பட்டு பொதுப் போக்குவரத்து, இ-பாஸ் ஆகிய நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், சுற்றுலாத் தலங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்துக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தங்க ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், உதகையில் உள்ள தனியார் தங்கும் விடுதி கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. இதன் பேரில், இந்தத் தங்கும் விடுதியில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஒரு டோஸ் செலுத்தியிருந்தால் ரூ.780-ம், இரண்டு டோஸ்கள் செலுத்தியிருந்தால் ரூ.1560-ம் மொத்தக் கட்டணத்திலிருந்து கழிக்கப்படும் என்று உதகை டைகர் ஹில் டிலைட்ஸ் இன் ரிசார்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் அருண் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ''கரோனா தொற்றால் ஏராளமானோர் தொழில் மற்றும் வேலையை இழந்துள்ளனர். மக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் நாடு முழுதும் கரோனா தடுப்பூசி இயக்கம் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எங்கள் ரிசார்ட்டில் தங்குபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தால், அவர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

ஒரு டோஸ் செலுத்தியிருந்தால் ரூ.780, இரண்டு டோஸ் செலுத்தியிருந்தால் ரூ.1560 கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பித்தால் பணம் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் தங்கிச் செல்லவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT