அழிவின் விளிம்பில் உள்ள புலிகளைப் பாதுகாக்க ஆண்டுதோறும் ஜூலை 29 (இன்று) உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை 5-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நாகர்ஹோலே, பந்திப்பூர், முதுமலை, சத்தியமங்கலம் உட்பட்ட புலிகள் காப்பகங்கள் மற்றும் வயநாடு காட்டுயிர் சரணாலயம் ஆகிய பகுதிகள், காடுகளில் வாழும் வங்கப் புலிகளை அதிகம் கொண்ட நிலப்பரப்பாக உள்ளன.
321 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 668 சதுர கி.மீ. பரப்பளவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 5 புலிகள் காப்பகத்தில் முதுமலை தான் சிறியது.
புலிகள் காப்பகத்தைச் சுற்றிலும் தொடரும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாகப் புலிகளின் வாழ்விடப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அதேவேளையில், கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்ற புலிகளின் எண்ணிக்கை, தற்போது மெல்ல அதிகரித்து வருவதாக வெளியிடப்படும் ஆய்வு முடிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், முதுமலையில் மொத்தம் 162 புலிகள் இருப்பதாகவும், இதில், 103 புலிகள் முதுமலையை மட்டுமே வாழ்விடமாகக் கொண்டுள்ளதாகவும், 59 புலிகள் வெளிவட்டப் பகுதிகளில் இருந்து வந்து முதுமலையை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
முதுமலை உள் மற்றும் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்து, முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, "முதுமலை பாதுகாக்கப்பட்ட பகுதியில் 100 சதுர கி.மீ. பரப்பளவில் புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.88 என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது. இதன்படி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் கூடியிருக்க வாய்ப்புகள் உள்ளன.
வெளி மண்டலத்தைப் பொறுத்தவரை 2014-ல் இணைத்து அறிவிக்கப்பட்டாலும், 2018-ல்தான் முதுமலையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை" என்றார்.
'நெஸ்ட்' அமைப்பின் சிவதாஸ் கூறும் போது, "புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அவற்றின் வாழ்விடப் பற்றாக்குறை பெரும் இன்னலுக்குள் அவற்றை இட்டுச் செல்லும். எனவே, வன விரிவாக்கம் இவற்றுக்கு உடனடித் தேவையாக உள்ளது" என்றார்.
உதகை அரசு கலை கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறும்போது, "புலிகள் பல்லுயிர்ச் சூழலில் முதன்மையானவை. புலிகளைப் பாதுகாக்கவே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 'பிராஜெக்ட் டைகர்' திட்டம் கொண்டுவந்தார். நல்ல உயிர்ப் பன்மை உள்ள வனத்துக்கு புலிகள் ஒரு அடையாளம்.
புலிகளைப் பாதுகாக்க 2010-ம் ஆண்டு முதல் ஜூலை 29-ம் தேதி புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முதலில் பந்திப்பூர் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகள் புலிகள் பாதுகாப்புக்கு மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் உலகிலேயே முக்கியமானது. புலிகள் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. இதைப் பாதுகாத்தால் புலிகள் பாதுகாக்கப்படும்" என்றார்.