சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சமூக சீர்திருத்த துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு உரிமை மற்றும் நலனை உறுதிசெய்ய வேண்டும். திருமண நிதியுதவித் திட்டங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்க வேண்டும்.
குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலைகளை களைய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதற்கான சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு, உலர் உணவுப் பொருட்கள், சத்துமாவு, முட்டைகள் ஆகியவற்றை சுத்தமாகவும், தரமானதாகவும் வழங்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் அதிகம் உள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருநங்கையர் கல்வியுறிவு பெற்று, சுயமாக வாழத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து முதியோர் இல்லங்களும் அங்கீகாரத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிபுரியும் மகளிர் விடுதி இல்லாத மாவட்டங்களில், விடுதிகள் அமைக்க வேண்டும். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். சமூக சீர்திருத்தத் துறை மூலம் சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், சமூக நலத் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், சமூக சீர்திருத்தத் துறை செயலர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.