தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச்சேர்ந்த தொழிலதிபர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்கள், நிதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், அந்த நிதி நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்தரூ.15 கோடியை தராமல் ஏமாற்றிவிட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா- பைரோஜ்பானு தம்பதியர் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், நிதி நிறுவன பொது மேலாளர் ஸ்ரீகாந்த்(56), நிதி நிறுவன கணக்காளர்களான கும்பகோணம் டபீர் கீழத் தெருவைச் சேர்ந்த மீரா(30), அவரது தம்பி ஸ்ரீதர்(29) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான நிதி நிறுவன அதிபர்களான எம்.ஆர்.கணேஷ் சகோதரர்கள், ஊழியர்கள், ஏஜென்ட்களைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நிதி நிறுவனத்தை நடத்தி வந்த எம்.ஆர்.கணேஷின் மனைவி அகிலா(33) மற்றும் நிதி நிறுவனத்தில் ஏஜென்டாக செயல்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த புரோகிதர் வெங்கடேசன்(58) ஆகிய இருவரையும் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை ஆக.11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.