தமிழகம்

மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு முதல்கட்டமாக 5 லட்சம் அடையாள அட்டைகள்

கி.ஜெயப்பிரகாஷ்

மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்துக்கு முதல்கட்டமாக 5 லட்சம் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் 24-ம் தேதிக்கு பிறகு விண்ணப்பித்த ஒரு மணிநேரத்தில் அடையாள அட்டை கள் வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக சென்னையில் தொடங்கப்படும் பின்னர், மற்ற இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தினால் சுமார் 75 லட்சம் முதியோர் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முடங்கிய இணையதளம்

மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் திட்டம் கீழ் டோக்கன் பெற www.mtcbus.org என்ற இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் 42 இடங்களில் விண் ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணி பிறகு இணையதளம் முடங்கியது. இதனால், விண்ணப்பங்களை பெற காலதாமதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் திட்டம் குறித்து ஆங்காங்கே உள்ள பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகளில் பொது மக்கள் ஆலோசனை கேட்க தொடங்கிவிட் டனர். சிலர் இணையதளங்களில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க தொடங்கிவிட்ட னர். விண்ணப்பங்களை பேருந்து மற்றும் பணிமனைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நகல் எடுத்துக் கொள்ளலாம்.

அடையாள அட்டை யில் முதியோர் புகைப்படம், பெயர், முகவரி மற்றும் விதிமுறைகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று இருக்கும். மேலும், ஆண்டுதோறும் அட்டையை புதுப்பிக்கும் வகையில் காலம் இடம் பெற்று இருக்கும். இதற்கிடையே, 5 லட்சம் விண்ணப்பங்களை நாங்கள் இலவசமாக விநியோகம் செய்யவுள்ளோம். மேலும், முதல்கட்டமாக 5 லட்சம் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று விண்ணப்பித்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் அட்டைகள் வழங்கப்படும். மேலும், வரும் 24-ம் தேதி பிறகு விண்ணப்பித்த ஒரு மணிநேரத்தில் அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT