தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம்; மு.க.ஸ்டாலின் உட்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேரை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, ஏப். 4-ஆம் தேதி, முழு அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்தது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இவர்கள் அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையை நோக்கி, பேரணியாகச் சென்றனர். இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், அனுமதியின்றி பேரணியாகச் சென்றதாகவும் மு.க.ஸ்டாலின், அப்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் நடிகர் சரத்குமார், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், காதர் மொய்தீன் ஆகிய 7 பேர் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் மீதும் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக, அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறி, அந்த உத்தரவு நகலை சமர்ப்பித்தார். இதை ஏற்ற நீதிபதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT