உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவர்களின் கல்லீரலை தானம் செய்த நபர்களின் குடும்பத்தினரை மருத்துவமனை டீன் பாலாஜி நேற்று கவுரவித்தார். கண்காணிப்பாளர் ஜமிலா, ஆர்எம்ஓ ரமேஷ், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர். படம்: ம.பிரபு 
தமிழகம்

உலகில் 2.9 கோடி மக்கள் கல்லீரல் நோய்களால் பாதிப்பு: அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தகவல்

செய்திப்பிரிவு

உலக கல்லீரல் அழற்சி தினத்தை (Hepatitis) முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை உள்ளிட்ட கல்லீரல் நோய்கள் (Hepatitis-B and C) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் ரேவதி இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜமிலா, ஆர்எம்ஓ ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். மருத்துவமனை டீன் பாலாஜி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கல்லீரல் நோய்கள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவர்களின் கல்லீரலை தானம் செய்த குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் ரேவதி கூறியதாவது:

ஹெபடைடிஸ் பி வைரஸ் கிருமியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் ப்ளூம்பெர்க் என்பவரை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி `உலக கல்லீரல் அழற்சி' தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 2.9 கோடி மக்கள் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 10.1 லட்சம் பேர் நோயின் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர். இந்த நோயை 2030-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக அகற்றுவதே உலக சுகாதார நிறுவனத்தின் குறிக்கோளாகும். அதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கல்லீரல் பிரிவு வைரஸ் கிருமியை கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்துவது, நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடுவது போன்றவற்றில் ஈடுபடுவதுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையை இலவசமாக அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்திலும் கர்ப்பிணிகள், செவிலியர்கள், சுகாதார கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT