மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ள போதிலும் தொடங்கப்படாத படகு சேவை. படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை மீண்டும் தொடங்குமா?- சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை மீண்டும் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகுச் சேவை தொடங்கப்பட்டது. மதுரை மாவட்ட மக்களுக்குப் பொழுது போக்க சுற்றுலாத் தலங்கள் பெரிதும் இல்லாத நிலையில், மாரியம்மன் தெப்பக்குள படகு சேவை மக்களைக் குதூகல மடையச் செய்தது.

காலப்போக்கில் தெப்பக்குளத் துக்கு தண்ணீர் வரும் மழைநீர் கால்வாய்கள் அடைபட்டதால் தெப்பக்குளம் வறண்டு நீரில்லாமல் காணப்பட்டது. இதனால், படகு சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வைகை ஆற்றில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் வரும் வகையில், தூர்ந்துபோன கால்வாய் தூர்வாரப்பட்டது. அதன்பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போதெல்லாம் தெப்பக்குளத்தில் நீர் நிரப்ப மாநகராட்சியும், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் படகு சேவை தொடங்கப்பட்டன.

கரோனாவுக்கு முன் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் படகு சேவையால் அதிகளவு வரத்தொடங்கினர். கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் தெப்பக்குளத்தில் படகு சேவை நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, ஊரடங்கு படிப்படியாக தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

முன்புபோல் மதுரை சுற்றுலாத் தலங்களுக்கு உள்ளூர் மக்கள் வெளியூர் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். தெப்பக் குளத்தில் தண்ணீர் இருந்தும் படகு சேவை இல்லாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்தி கேயனிடம் கேட்டபோது, சுற்றுலா தலங்களில் இன்னும் படகு சேவை தொடங்கப்படவில்லை. தமிழக அரசு வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்டதும் உறுதியாக முன்புபோல் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக் குளத்திலும் படகுசேவை தொடங்கப்படும், என்றார்.

SCROLL FOR NEXT