வேலூரில் விண்கல் விழுந்து இறந்த கல்லூரி வாகன ஓட்டுனர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வேலூர், நாட்றாம்பள்ளி, கே.பந்தாரப்பள்ளியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 6-ம் தேதி(சனிக்கிழ்மை) விண்கல் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கல்லூரியின் பேருந்து ஓட்டுனர் காமராஜ் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.
அந்த விபத்தில் கல்லூரியில் தோட்ட பராமரிப்பாளர்களாக இருக்கும் சசிகுமார், முரளி மற்றும் மாணவர் சந்தோஷ் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த காமராஜ் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.