தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளா தாரம் மேம்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைஅத்துறையின் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கோபால், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், அணைக்கட்டு சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு களாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தேக்கமடைந்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிப்பில் பல முறைகேடுகள் நடைபெற் றுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, அரசு வழங்கிய சிறப்பு திட்டம் மக்களை சென்று சேராமல் அரசுப்பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வும் நடந்து வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புற மக்களின் வாழ்வா தாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். சாலை வசதி, தெரு மின்விளக்கு, குடிநீர், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒவ்வொரு கிராமத்திலும் மேம்படுத்தப்படும். அதேபோல, கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தற்போது 273 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், 100 நாள் வேலை திட்டத் தின் கால அளவு உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் உயரும். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கி தரப்படும். அதேபோல, மலைக்கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறுகிய காலத்தில் செய்து தரப்படும்.
கிராம மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல் முறைகேட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர், பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும், திமுகவும் தயாராக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது’’ என்றார்.