சசிகலாவும், டிடிவி தினகரனும் திமுகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த முதன்மை வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டி திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். இதில், அதிமுகவினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:
‘’சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைத் திமுக அறிவித்து தேர்தலில் வெற்றி பெற்றது. அதில், நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, காஸ் மானியமாக ரூ.100 வழங்கல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைத் திமுக நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இதன் மூலம் திமுக அளித்தது பொய்யான வாக்குறுதிகள் என்பதை மக்கள் தெரிந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.
மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அரசு தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைத் திமுக அரசு ஒரு தலைபட்சமாகச் செயல்பட்டு அதைத் தடை செய்து முடக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் இது போன்ற பாகுபாடு பார்க்கவில்லை. மக்கள் நலனே முக்கியம் என்பதை அதிமுக அரசு எண்ணியது.
தேசிய வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடனை ரத்து செய்ய மாநில அரசுக்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் பேசுவோர்கள் அனைவரும் அமமுகவினர் மட்டுமே.
சசிகலாவிடம் தொலைபேசியில் பேசுபவர்கள் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் போய்ச் சேர்கின்றனர். இதில், ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. சதித் திட்டம் நடைபெறுவதை அறிந்த சசிகலா தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கத் தொடங்கியுள்ளார். சசிகலாவும், தினகரனும் திமுகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுக 50-ம் ஆண்டை முன்னிட்டு விரைவில் பொன்விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதைப்போல 100 ஆண்டுகள் கடந்தாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிப்போம்’’.
இவ்வாறு கே.சி.வீரமணி தெரிவித்தார்.