கரோனா பணிக்குழு அமைத்து தினசரி நிலவரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டுமென வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
22-வது வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் இன்று(ஜூலை 28 நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
மாநில சுகாதார இயக்க திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு புதுச்சேரியில் கரோனா நிலவரம், மூன்றாவது அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விகிதம், குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை ஆகியவை குறித்து படக் காட்சி மூலம் விளக்கினார்.
தலைமைச் செயலர் அஸ்வனி குமார், காவல்துறை ஏடிஜிபி ஆனந்த மோகன், வருவாய்த்துறைச் செயலர் அஷோக் குமார், உள்ளாட்சித்துறைச் செயலர் வல்லவன், சுகாதாரத்துறைச் செயலர் அருண், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுதரி, மாநில கரோனா மேலாண்மை பொறுப்பதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி சாயரா பானு மற்றும் ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகாரிகள், பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது, ‘‘தடுப்பூசித் திருவிழாவைத் தீவிரப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மக்களிடையே தடுப்பூசி குறித்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். இதில், அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களை ஈடுபடுத்தலாம்.
எதிர்காலத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வெளிமாநில அல்லது வெளிநாட்டுப் பயணம், அரசு நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கேட்பதற்கான சூழல் உருவாகலாம் என்பதை எடுத்துக் கூறி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட பயனாளிகளுக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு என்று தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டும். ஆகஸ்டு 15-க்குள் 100 சதவீத தடுப்பூசி போடுவதற்கு மக்களை ஊக்கப்படுத்த வெவ்வேறு உத்திகளைக் கையாள வேண்டும். அதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா பணிக்குழு அமைத்து தினசரி நிலவரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் திட்டமிடுதல் வேண்டும்.’’என்றார்.