தமிழகம்

விவசாயிகள் கடன் தள்ளுபடி: திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் - ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

விவசாய கடன்களில் இருந்து விடுபட்டு, அவர்கள் வாழ்வு செழிப்படையும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோட்டில் நடந்த விவசாய கடன் விடுதலை மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் நலிவடைய ஆல்கஹாலுக்கும், சர்க்கரைக்கும் விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி காரணமாக உள்ளது. சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்யாமல் அரசு விட்டதால், கரும்பு நிலுவைத்தொகையை உரிய காலத்தில் ஆலைகளால் வழங்க முடியவில்லை. விவசாயிகளை ஏமாற்றுவதற்காக கரும்புக்கு ஆதார விலையை அரசு அறிவிக்கிறது. பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தப்படவில்லை. ஆண்டுதோறும் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யும் முன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

சர்க்கரை மீதான மதிப்பு கூட்டுவரியை ரத்து, ஆல்கஹால் மீதான 14.5 சதவீத வரியை குறைத்தல், இதர மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்தல், ஆலை மின்சாரத்தை கொள்முதல் செய்தல் ஆகியவற்றால் மட்டுமே ஆலையையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும். தற்போதைய ஆட்சி வாங்கியுள்ள கடன்களால், புதிதாக பொறுப்பேற்கும் அரசு பெரும் நிதிநெருக்கடியை சந்திக்கவுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும், மதுவிலக்கை அமல்படுத்தி முதல் கையெழுத்தை போடுவதால், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி கூடுதல் சுமை ஏற்படும். அதேபோல், புதிய அரசு அமைந்ததும் தமிழக விவசாயிகளின் கடன்சுமையை போக்க ஆலோசிக்கப்படும். விவசாய கடன்களில் இருந்து விடுபட்டு, அவர்கள் வாழ்வு செழிப்படையும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT