தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜியுடன் சுதந்திரப் போராட்ட தியாகி ஸ்ரீராமராஜி கலந்து கொண்ட படம். 
தமிழகம்

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு 1951-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பெற 70 ஆண்டுகளாக போராடும் வாரிசுகள்: கைகொடுப்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பாரதியார் தெருவில் வசித்து வருபவர் யுவராஜ் (63). இவரது தந்தை சுதந்திர போராட்ட தியாகி ஸ்ரீராமராஜி. தாயார் முனியம்மாள். யுவராஜூயுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர் உள்ளனர். தியாகி ராமராஜின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் கடந்த 1951-ம் ஆண்டு சூளகிரி அருகே தியானதுர்க்கம் மற்றும் காமன்தொட்டி ஆகிய கிராமங்களில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலத்தை ஒப்படைக்கக் கோரி ஸ்ரீராமராஜி 33 ஆண்டுகளாக மனு அளித்து வந்த நிலையில் 1984-ம் ஆண்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது மனைவி முனியம்மாள் 26 ஆண்டுகளாக மனு அளித்து வந்தவர், கடந்த 2010-ல்உயிரிழந்தார். தற்போது அவரது மகன் யுவராஜ் 11 ஆண்டுகளாக நிலத்தை ஒப்படைக்க வலியுறுத்தி மனுக்கள் அளித்து வருகிறார்.

இதுவரை 500 மனுக்கள்

இதுதொடர்பாக யுவராஜ் கூறியதாவது: எங்க அப்பா ராமராஜி,மறைந்த முதல்வர் ராஜாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் சுதந்திரப் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றவர். அப்போதையகாலகட்டத்தில் கிருஷ்ணகிரி நகரில் எங்களது குடும்பம் வசதியானது. எனது தந்தை தொடர்போராட்டங்களில் பங்கேற்க எங்களுக்கு சொந்தமான இடங்களை விற்பனை செய்தார்.

போராட்டத்தில் பங்கேற்று அவர் சிறை சென்றதால், குடும்பத்தை நடத்த மீதியுள்ள சொத்துகளை விற்பனை செய்தார். தற்போது எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு மட்டும் உள்ளது. இந்த வீட்டில் நான், என் சகோதரர்கள் உட்பட 5 குடும்பத்தைச் சேர்ந்த 40 பேர் இடநெருக்கடியில் வாழ்ந்துவருகிறோம். இரவில் உறங்குவதற்காக மட்டும் எதிரே வாடகைக்கு வீடு எடுத்துள்ளோம். இதனை தவிர சிலர் வெளியூரிலும் வேலைக்காக தங்கியுள்ளனர்.

எனது தந்தையின் தேசபக்திக்காக அரசு சார்பில் அப்போதைய ஓசூர் வட்டத்தில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அலுவலர்கள் பல்வேறுகாரணங்களைக் கூறி 7.5 ஏக்கர் நிலம் வழங்க முன் வந்தனர். ஒதுக்கப்பட்ட நிலத்துக்கான சர்வே எண்மற்றும் அ-பதிவேட்டில் எனது தந்தையின் பெயர் இடம் பெற்றும், இதுவரை நிலம் ஒப்படைக்கப்படவில்லை. நிலத்தை ஒப்படைக்க வலியுறுத்தி பிரதமர், முதல்வர், மாவட்ட ஆட்சியர் என நாங்கள் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தும் தீர்வு காணப்படவில்லை.

இதற்கிடையே கடந்த ஜன. 4-ம்தேதி சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் வழங்குவது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. வட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கையை ஓசூர் துணைஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். தற்போது வரை அதன் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. பரிசீலனை, அலைக்கழிப்பு என 70 ஆண்டுகளுக்கும்மேலாக போராடி வருகிறோம்.தற்போது வரை எனது தந்தைக்காக ஒதுக்கப்பட்ட எல்லா நிலங்களும் அரசு நிலங்களாகவேஉள்ளன. அரசு ஒதுக்கிய நிலத்தை, அலுவலர்கள் வழங்குவார்கள் என காத்திருந்த எனது தந்தை, தாய், சகோதரிகள் இருவர் என 4 பேர் இறந்துவிட்டனர்.

தற்போது தமிழக முதல்வரின், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் மனு அளித்து விரைவான நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். வறிய நிலையில் உள்ள எங்களது குடும்பத்தை காத்திட, அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை ஒப்படைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.

பெட்டிக் கடைக்கும் வழியில்லை

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு உதவிவழங்கும் என்கிற நம்பிக்கையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் பெட்டிக் கடை வைக்க, உள்ளூர் அலுவலர்களை சந்தித்து யுவராஜ் மனு கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் பல முறை விசாரணை நடத்தியும், அனுமதி கொடுக்கவில்லை.

SCROLL FOR NEXT