சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த டேனிஷ்பேட்டை அருகே உள்ள கண்ணப் பாடி மலைக் கிராமத்தில் புதரில் இருந்து மீட்கப்பட்ட உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வனத் துறையினர் மற்றும் போலீஸார். 
தமிழகம்

சேலம் அருகே மலைக் கிராமத்தில் புதரில் கிடந்த உரிமம் இல்லாத 20 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

செய்திப்பிரிவு

சேலம் அருகே மலைக் கிராமத்தில் புதரில் வீசப்பட்ட உரிமம் இல்லாத 20 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறை மற்றும் போலீஸார் மீட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க காவல்துறை மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலத்தை அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கண்ணப்பாடி மலைக் கிராமத்தில் கடந்த 24-ம் தேதி டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் பரசுராம மூர்த்தி மற்றும் தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாவதி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், ‘உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஊரில் உள்ள பொது இடத்தில் வைத்துவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று அங்குள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள புதரில் துப்பாக்கிகள் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனச்சரக அலுவலர் பரசுராம மூர்த்தி தலைமையிலான குழுவினர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீஸார் அங்கு சென்று புதரில் கிடந்த உரிமம் இல்லாத 20 நாட்டுத் துப்பாக்கிகளை மீட்டனர்.

பின்னர் அவை அனைத்தும் தீவட்டிப்பட்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT