தமிழகம்

‘தி இந்து’ - கலாமைக் கொண்டாடுவோம் விழா: சமூக அவலங்களுக்கு காரணம் என்னவென்று இளைஞர்கள் யோசிக்க வேண்டும் - மருத்துவர் கு.சிவராமன் அறிவுரை

செய்திப்பிரிவு

இன்றைய சமூக அவலங்களுக்கு காரணம் என்னவென்று இளைஞர்கள் யோசிக்க வேண்டும் என்று மருத்துவர் கு.சிவராமன் அறிவுரை கூறினார். ‘தி இந்து’ நாளிதழுடன் செவ்வாய்க்கிழமைதோறும் வெளிவரும் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழ் சார்பில் ‘கலாமைக் கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘வாருங்கள் வளமான இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை, திருச்சியைத் தொடர்ந்து சென்னையில் லயோலா கல்லூரி சாலியர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஒருங்கிணைத்து நடத்தினார். சித்த மருத்துவர் கு.சிவராமன், மீனாட்சி மகளிர் கல்லூரி முன்னாள் தமிழ்ப்பேராசிரியை பத்மாவதி விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மருத்துவர் கு.சிவராமன் கூறியதாவது: தற்போது மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. மாணவர்களுக்கு பாடத்தை தாண்டி சமூக அக்கறை வர வேண்டும். இந்தியா ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. ஒரு பக்கம் பணக்காரர்கள், இன்னொரு பக்கம் ஏழைகள். ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்? என்ற சிந்தனையை புத்தக வாசிப்புதான் தூண்டும்.

மாணவர்களுக்கு அறச்சீற்றம் இருக்க வேண்டும். தவறுகளுக்கு எல்லாம் என்ன காரணம் என்று யோசிக்கும் முனைப்பு இளைஞர்களிடம் இல்லை. பல்வேறு சமூக அவலங்களுக்கு என்ன காரணம் என்றும் அவர்கள் யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பேராசிரியை பத்மாவதி விவேகானந் தன் கூறியதாவது: விடுதலைப் போராட்ட காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காந்தியுடன் இணைந்து போராடினார்கள். ஆனால், இன்று பணம், பணம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இதுபோன்றே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆடம்பரங்களை நோக்கி ஓடுகின்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது. அரசியல் சாக்கடை என்று சொல்வதை விட்டுவிட்டு, அதில் இறங்கி சுத்தப்படுத்த வேண்டும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இளைஞர்கள் தங்களை சமுதாயத்தோடு இணைத்து கொள்ள வேண்டும். சமுதாயத்தை நோக்கியே இளைஞர்களின் பயணம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 20 மாணவ-மாணவிகளுக்கு க்ரியா அகராதி, ஏர்செல் சிம்கார்டு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. சிறப்பாக கருத்துகளைத் தெரிவித்த திருச்சி டிஆர்பி பொறியியல் கல்லூரி மாணவர் செ.யுவராஜ், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவி சு.மீனாட்சி ஆகியோருக்கு வெள்ளிப்பதக்கம், சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் ரூ.5 ஆயிரத்துக்கான பரிசுக் கூப்பன் ஆகியவை வழங்கப்பட்டன. இப்பரிசுகளை லயோலா கல்லூரி முதல்வர் அருட்திரு ஜோசப் அந்தோணிசாமி, ‘தி இந்து’ வர்த்தக தலைவர் ஷங்கர் வி.சுப்ரமணியம், உதவி பொதுமேலாளர் தாமோதரன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’வுடன் இணைந்து வேலம்மாள் கல்வி நிறுவனங்கள், ஏர்செல், காளீஸ்வரி பட்டாசுகள், தி சென்னை மொபைல்ஸ், சென்னை லயோலா கல்லூரி ஆகியவை நடத்தின. முன்னதாக, ‘தி இந்து’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் வரவேற்று, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் லயோலா கல்லூரி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் அலெக்ஸ் பரிமளம், ஆங்கிலத்துறை பேராசிரியர் அந்தோணிசாமி உட்பட ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT