தமிழகம்

சென்னையில் அப்துல் கலாமுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அப்துல் கலாமின் படத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதையொட்டி அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியல் மாண்புடனும், மனித நேயத்துடனும், இன, மத பாகுபாடுகளைக் கடந்து அனைவரையும் நேசித்தவர் அப்துல் கலாம். தான் வகித்த பதவிக்கும், பிறந்த மண்ணுக்கும், தேசத்துக்கும் பெருமை சேர்த்தார்.

அவரைக் கவுரவிக்கும் வகையிலும், அவரது சிந்தனைகள் தொடர்ந்து நமது சமூகத்தை வழிநடத்திச் செல்லும் விதமாகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நூலகத்துடன்கூடிய மணிமண்டபம் அமைத்து அவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தலைமையில், ‘சிறந்த இந்திய இயக்கம்’ சார்பில் மரக்கன்றுகள் மற்றும் மரவிதைகள் வழங்கும் ‘விதைக் கலாம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு மாவட்ட ஆட்சியர் இதைத் தொடங்கிவைத்தார்.

சென்னை அசோக் நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்துகொண்டு அப்துல்கலாமின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதைத்தவிர பல்வேறு கல்வி நிறுவனங்களில் அப்துல் கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT