விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கைவினைத் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். களிமண், மரச் சிற்பங்கள், காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவைகளை மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
மேலும், அனைவரும் அறிந்த அப்பம்பட்டு முட்டை மிட்டாய் இந்த மாவட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
இத்தொழில் முனைவோர் பயனடையும் வகையில், இத்தயாரிப்புகளை சந்தைபடுத்த அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டுவர ஆட்சியர் மோகன் முயற்சி செய்து வருகிறார்.
இது குறித்து அவர் இந்து தமிழிடம் கூறியது:
கோலியனூர் ஒன்றியத்தில் களிமண் கொண்டு சிற்பங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் செய்யும் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை ஒரு கூட்டமைப்பாக ஒருங்கிணைத்து, அவர்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 40 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை அளித்து, அதில் மண் எடுத்து கொள்ளவும் ,கிடங்கு அமைத்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மண் எடுத்து செல்ல டிராக்டர் ஒன்றும் வழங்கப்பட உள்ளது.
இதே போல முகையூர் ஒன்றியத்திலும் கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர். இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒருங் கிணைத்து அவர்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அமேசான் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனதிற்கும் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இதை சந்தைபடுத்தப்பட உள்ளோம். இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கும். ரூ 50 முதல் ரூ 5 ஆயிரம் வரை கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வரும். இதன் மூலம் இம்மாவட்ட மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்த முயற்சிக்கிறோம்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்ற விவரம் அடங்கிய கையேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் , பொது மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பின் தங்கிய மாவட்டமான விழுப்புரத்தை ஏற்றுமதி மண்டலமாக மாற்றும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இதுதவிர, மாவட்ட நிர்வாகம் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் பேச உள்ளோம். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ‘பில்கேட்ஸ் பெடரேஷன்’ மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அப்போது மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உடனிருந்தார்.