தமிழகம்

சென்னை பஸ் நிலைய தாய்மார்கள் பாலூட்டும் அறைகளால் கிடைக்கிறதா முழு பலன்?

பூர்வஜாசுனிதா சேகர்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாள், உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு, பாலூட்டும் தாய்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், தமிழ்நாட்டின் முக்கிய பேருந்து நிலையங்களில் 'பாலூட்டும் தாய்மார்கள் அறை'களை நிறுவியுள்ளது.

சென்னையில், 39 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் 32 அறைகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தாலும், 7 அறைகள் பெருநகர சென்னை மாநகராட்சியாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

இத்திட்டம் தொடங்கப்பட்டு, ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தி இந்து, பாலூட்டும் அறைகள் மீதான ஆய்வை நடத்தியது. இதன்படி பெரிய, முக்கியமான பேருந்து நிலையங்களில், பாலூட்டும் அறைகளைப் பயன்படுத்தும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகமாகவும், சிறிய பேருந்து நிலையங்களைப் பயன்படுத்தும் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

''மந்தைவெளி பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையை இதுவரை யாரும் பயன்படுத்தியதை நான் அறியவில்லை'' என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துநர்.

அதே நேரம், கோயம்பேடு பேருந்து நிலைய அறையை தினமும் சுமார் 15 பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கே மொத்தமாக இரண்டு பெரிய அறைகளில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளன. ஒன்றில் திரைச்சீலைகளால் ஆன 7 தடுப்புகளும், மற்றொன்றில் 8 தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன.

தமிழக குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரான சண்முகவேலாயுதம், ''சிறிய பேருந்து நிலையங்களில் இத்தகைய வசதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தாய்மார்கள் பயன்படுத்தக் கூடிய அறைகள் என்பதைக் குறிப்பிடும் பெரிய பலகைகளோ, அடையாளங்களோ வைக்கப்பட வேண்டும்.

இத்தகைய வசதிகளுக்கான நேரம் முறைப்படுத்தப்பட்ட வேண்டும். அவை திறந்திருக்கும்போது உதவிக்கு பெண் ஊழியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இது போன்ற வசதிகளின் மூலம், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்'' என்று கூறினார்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த பெண்கள், ''பாலூட்டும் அறைகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. இத்தகைய வசதிகளை வழிபாட்டு இடங்கள், மால்கள் மற்றும் பொது இடங்களில் நிறுவினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் முக்கியக் கடமை'' என்றனர்.

SCROLL FOR NEXT