தமிழகம்

கும்பகோணத்தில் மகாமகப் பெருவிழா கோலாகலம்: 10 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

கல்யாணசுந்தரம், சி.கதிரவன், வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்த வாரி நேற்று நடைபெற்றது. இதில் 10 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் பங்கேற்றுப் புனித நீராடினர்.

மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசி யிலும் வரும் முழு நிலா நாளில், மக நட்சத்திரமும் ரிஷப லக்னமும் கூடி வரும் நாளே மகாமகப் பெருவிழாவாகக் கொண்டாடப்படு கிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இவ்விழா, 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக மகாமகப் பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்கள் மற்றும் 6 வைணவ கோயில்களில் முறையே பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினமும் கோயில்களில் சுவாமி வீதியுலா, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடை பெற்றன.

கொடியேற்றம் நடைபெற்ற நாள் முதல் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகக் குளத்தில் குளித்த வண்ணம் இருந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு, மகாமகக் குளத்தின் கிழக்கு கரையில் அபிமுகேஸ்வரர்- அமுதவல்லி, பாணபுரீஸ்வரர்- சோம கமலாம்பிகை, தெற்கு கரை யில் அமிர்தகலசநாதர்- அமிர்த வல்லி, கவுதமேஸ்வரர்- சவுந்தர நாயகி, மேற்கு கரையில் காளஹஸ் தீஸ்வரர்- ஞானாம்பிகை, கோடீஸ் வரர்- பந்தாடு நாயகி, வடக்கு கரையில் ஆதிகும்பேஸ்வரர்- மங்களாம்பிகை, காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, நாகேஸ்வரர்- பெரிய நாயகி, ஆதிகம்பட்டவிஸ்வநாதர்- ஆனந்த நிதியம்பிகை, காமாட்சி அம்பிகை, சோமேஸ்வரர்- சோமசுந்தரி ஆகிய உற்சவர்கள் எழுந்தருளினர்.

மகாமகக் குளத்தில் நண்பகல் 12.05 மணிக்கு தீர்த்தவாரிக்கான பூஜைகள் தொடங்கின. அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பகல் 12.40 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் ‘நமசிவாய, நமசிவாய’ என பக்திப் பெருக்குடன் கோஷங்களை எழுப்பியபடி குளத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

விழாவில், தருமபுரம் ஆதீன கர்த்தர் சண்முக தேசிக ஞானசம் பந்த பரமாச்சாரியார், திருவாவடு துறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், செங்கோல் ஆதீனம் சிவப் பிரகாச சத்யஞான தேசிக பரமாச் சாரியார் உள்ளிட்டோர் பங்கேற் றனர். மகாமகம் தொடங்கிய நாள் முதல் நேற்று முன்தினம் வரை சுமார் 34 லட்சம் பக்தர்கள் நீராடி யுள்ள நிலையில் நேற்று ஒருநாள் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

பொற்றாமரைக் குளத்தில்…

மகாமகக் குளத்தில் நீராடிய பக்தர்கள், அடுத்து சாரங்கபாணி கோயிலுக்குச் சொந்தமான பொற்றாமரைக் குளத்திலும், தொடர்ந்து காவிரி ஆற்றிலும் புனித நீராட வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி, நேற்று மகாமகக் குளத்தில் நீராடிய பக்தர்கள் அங்கி ருந்து நடந்து சென்று பொற்றா மரைக் குளத்தில் புனித நீராடினர். முன்னதாக, காலையில் சாரங்க பாணி கோயிலில் இருந்து பெருமாள், உபய நாச்சியார்களுடன் வீதியுலா நடைபெற்றது. இதை யொட்டி, சாரங்கபாணி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காவிரி படித்துறையில்..

மகாமகப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மகாமகப் பெருவிழா வில் தொடர்புடைய 5 வைணவ தலங்களின் சுவாமிகளான கோமள வல்லி தாயார் சமேத சாரங்கபாணி, சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார் சமேத சக்கரபாணி, பட்டா பிஷேக கோலத்தில் லட்சுமணன், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சனேயர் ஆகியோருடன் சீதாபிராட்டியார் சமேத ராம சுவாமி, செங்கமலவல்லி சமேத ராஜகோபால சுவாமி, பூமிதேவி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் ஆகியோர் அந்தந்த கோயில்களிலில் இருந்து புறப்பட்டு முக்கியவீதிகள் வழியாக சக்கரப் படித்துறை அருகே உள்ள சாரங்கபாணி தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து பெருமாளின் பிரதி நிதியான தீர்த்த பேரருக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடை பெற்றது. பகல் 12.40 மணிக்கு 5 தீர்த்த பேரர்களும் ஒரேநேரத்தில் காவிரி யில் தீர்த்தவாரி கண்டருளினர். இதைத்தொடர்ந்து காவிரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

SCROLL FOR NEXT