ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய தமிழக அரசின் இடைக்கால மனுவையும், ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடைகோரிய அப்போலோ மருத்துவமனையின் மேல்முறையீட்டு மனுவையும் இணைத்து 4 வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், நிபுணர்கள் ஆகியோர் விசாரணைக்காக ஆணையத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பினார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது, அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை வரம்புக்குட்பட்டுச் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து அப்போலோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகுவதற்கு விலக்குக் கோரியும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுசாமி ஆணைய விசாரணைக்குத் தடை கோரியும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அப்போலோ மருத்துவர்கள், ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது
இதனைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக விசாரணைக்கு வராமலிருந்த இந்த வழக்கு, நீதிபதி அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாதந்தோறும் 6 லட்ச ரூபாய் தமிழக அரசு செலவிட்டு வருகிறது எனவும், ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்றும், ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதம் வைத்தது
மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது எனவும், ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடரவும், அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும், ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டுமெனக் கோரிய தமிழக அரசின் மனுவையும் இணைத்து 4 வாரத்துக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.