அரியலூர் மாவட்டம் முட்டுவாஞ்சேரியில் நெல்லைக் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள். 
தமிழகம்

நெல்லைக் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

பெ.பாரதி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெல்லைக் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் குறுவைப் பட்டம் நெல் சாகுபடி சுமார் 2,000 ஏக்கரில் நடைபெற்றது. தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அறுவடை செய்த நெல்மணிகளை, ஏற்கெனவே சம்பா சாகுபடி கொள்முதல் செய்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காகக் கொட்டி வைத்தனர். இரு வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை நெல் கொள்முதல் செய்யாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அரியலூர் - தா.பழூர் சாலையில் நெல்லைக் கொட்டி மறியலில் இன்று ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குறுவை அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஏற்கெனவே, சம்பா நெல் கொள்முதல் செய்த கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வார்கள் என நெல்லைக் கொட்டி வைத்தால், இதுவரை கொள்முதல் செய்யவில்லை. எனவே, குறுவை நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்யக் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும்.

தற்போது, உயரதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து செல்வோம் எனக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரியலூர் - தா.பழூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT