வைகை அணை நீர்மட்டம் இன்று மதியம் 69 அடியை எட்டியது. முழுக் கொள்ளளவை நெருங்கியதைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார்.
கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டம் மற்றும் கேரளப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் மூலவைகை, பாம்பாறு, கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரினாலும் வைகைஅணையின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்தது.
கடந்த 4-ம் தேதி 66 அடியை எட்டியதால் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 24-ஆம் தேதி 68.50 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரி்க்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடிநீர் திறக்கப்பட்டிருந்த நீர் நேற்று ஆயிரத்து 867அடியாக அதிகரிக்கப்பட்டது.
கூடுதல் தண்ணீர் வரத்தால் 71அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 1 மணிக்கு 69அடியாக உயர்ந்ததால் நேற்று மூன்றாம் கட்ட வெள்ள அபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் அணையில் இருந்து நீரை திறந்து விட்டார்.
தற்போது அணையில் விநாடிக்கு ஆயிரத்து 713கனஅடி நீர்வரத்தும், நீர் இருப்பு 5ஆயிரத்து 542மில்லியன் கனஅடியும் உள்ளது.
ஏற்கனவே திண்டுக்கல், மதுரை பாசனம் மற்றும் ஆண்டிபட்டி சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 969கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக விநாடிக்கு 730கனஅடி நீர் என மொத்தம் 1699 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணை செயற்பொறியாளர் சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.
வைகைஅணை கட்டப்பட்டு 63ஆண்டுகளில் 30வது முறையாக அணைநீர்மட்டம் 69அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பருவமழையினால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததுடன் தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.