தமிழகம்

அப்துல் கலாம் வழியில் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதுச்சேரி அரசு துணை நிற்கும்: ஆளுநர் தமிழிசை பேட்டி

அ.முன்னடியான்

அப்துல் கலாம் வழியில் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதுச்சேரி அரசு துணை நிற்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(ஜூலை 27)அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கு மரக்கன்று நட்டனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவு தினத்தில் முதல்வருடன் இணைந்து வந்து அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை அடைகிறேன்.

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு ராமேஸ்வரத்தில் பிறந்து, விண்வெளியில் நாயகனாகத் திகழ்ந்து, உலக அளவில் இந்தியாவுக்கு புகழ் சேர்த்து, நமது குடியரசு தலைவராகவும் சிறப்பாகச் செயலாற்றிய அவருக்கு நம் புதுச்சேரியில் மரியாதை செலுத்துவதில் பெருமையடைகிறோம்.

குடியரசு முன்னாள் தலைவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். குழந்தைகள் கல்வி கற்று மேல்நிலை அடைய அவரது ஆசிர்வாதம் என்றும் இருக்கும். அதேபோல இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர். அவரது வழியில் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதுச்சேரி அரசு துணை நிற்கும்.’’இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT