பணியாளர் தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 968 காவல் உதவி ஆய்வாளர்கள், 62 தடய அறிவியல்துறை இளநிலை அறிவியல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குற்ற நிகழ்வுகளில் புலன் விசாரணை செய்யவும், குற்றச்செயல்களுக்கு தண்டனை பெற்றுத்தரும் துறையாக மட்டுமின்றி, குற்றங்கள்நடக்காத வகையில் சூழல்களை உருவாக்கும் துறையாகவும் காவல்துறை செயல்பட வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாகும். அந்த குறிக்கோளை நிறைவேற்ற காவல்துறையை பலப்படுத்தும் வகையில்தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காவல்உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு 968 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், தாலுகா காவல் நிலையங்களுக்கு 660 பேரும், ஆயுதப்படைக்கு 225 பேரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கு 39 பேரும் தேர்வாகியுள்ளனர். இதில் 281 பெண் உதவி ஆய்வாளர்களும் அடங்குவர். இவர்கள், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு காலம் அடிப்படை பயிற்சி பெறுவர்.
அதேபோல் குற்ற நிகழ்வுகளில் சேகரிக்கப்படும் சான்றுப் பொருட்களை அறிவியல் ஆய்வு செய்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்க உதவுவதே தடய அறிவியல் துறையின் இளநிலை அறிவியல் அலுவலர்களின் முக்கியப் பணியாகும். இப்பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 62 இளநிலை அறிவியல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாநகரங்கள், மாவட்டஆய்வுக்கூடங்களில் பணியமர்த்தப்படுவர்.
சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 968 பேரில் 10 பேருக்கும்,அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 62 பேரில் 10 பேருக்கும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், பணி நியமன ஆணை களை நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி எம்.ரவி, தடய அறிவியல் துறை இயக்குநர் மா.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.