கும்பகோணம் வருமான வரித் துறை அதிகாரி பழனிசாமியிடம், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநிலச் செயலாளர் பாலா அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து தலைமறைவாக உள்ள தொழிலதிபர்களான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் நிதி நிறுவனத்தில் ரூ.600 கோடி மோசடி செய்துள்ளதாக நகரில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும்.
எம்.ஆர்.கணேஷ் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் பலர் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிறுவனத்தில் 500-க்கும்மேற்பட்டோர் முதலீடு செய்துஇருக்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை அதுகுறித்து யாரும் புகார் தர முன்வரவில்லை.
எனவே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் அரசுக்கு வரி செலுத்தப்படாத கறுப்புப் பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் குறித்த விவரங்களை புலனாய்வுத் துறையினர் வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதுடன் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். கணக்கில் வராத கறுப்புப் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.