நுரையீரல் காசநோய் வந்தவர் களின் சளி, இருமல், தும்மலில் இருந்து, காற்றில் நீர் திவலைகள் பரவி மற்றவர்களுக்கு காசநோய் ஏற்படுகிறது. காசநோய் பாதிப்பில் இந்தியா முன்னணியில் இருப்ப தால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் அதை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து, அதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு கோவையில் காசநோயால் 4,761 பேரும், 2019-ல் 4,933 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையானது 2020-ல் 3,495 ஆக குறைந்தது. 2021 -ல் கடந்த 6 மாதத்தில் 1,746- ஆகஉள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் (காசநோய்) சக்திவேல் கூறியதாவது:
கரோனா பரவல், பொதுமுடக் கம் ஆகிய காரணங்களால் காசநோ யாளிகளை கண்டறிவதில் ஏற்பட்ட தொய்வு, கரோனா காரணமாக பொதுமக்கள் காசநோய் பரிசோதனை செய்துகொள்ள காட்டிய தயக்கம் ஆகியவை எண்ணிக்கை குறைய காரணமாக இருக்கலாம். கரோனா பரவலுக்கு முன்புவரை மாதத்துக்கு சராசரியாக 3,000 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. கரோனா பாதிப்புக்கு பிறகு, இந்த எண்ணிக்கையானது 800-ஆக குறைந்துவிட்டது.
கரோனா போன்றே சளி, இருமல்,தும்மலில் இருந்து காற்றில் நீர் திவலைகள் பரவி மற்றவர்களுக்கு காசநோய் ஏற்படுகிறது. கரோனா காலத்தில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியத்தொடங்கினர். எனவே, கரோனா தடுப்பு விதிமுறைகளாலும் காசநோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என கருதுகிறோம். இருப்பினும், உண்மை நிலவரத்தைஅறிய மாநகராட்சி காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்துகொண்டவர்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர் களின் விவரத்தை சேகரித்து வருகிறோம். அவர்களை நேரடியாக தொடர்புகொண்டு காசநோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி வருகிறோம்.
யாருக்கு பரிசோதனை அவசியம்
சர்க்கரை நோய், புற்றுநோய் பாதித்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இருமல் இருந்தால் காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு இருமல், மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை, சோர்வடைதல், இரவு நேரங்களில் வியர்வை, சளியில் ரத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை அவசியம். குழந்தைகளாக இருந்தால், 2 வாரத்துக்கும் மேல் இருமல், வயதுக்கு ஏற்ற உடல் எடை கூடாமல் இருப்பது, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். காசநோய் கண்டறியப்பட்டால் தொடர் சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணப்படுத்த முடியும். காசநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் சத்தான உணவு சாப்பிட, அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக மத்திய அரசு சார்பில் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.