தனியார் நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது. படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

மானியத்தை 70% ஆக உயர்த்தினால் புதுச்சேரி வளரும்: சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கருத்து

செய்திப்பிரிவு

புதுச்சேரிக்கான மானியத்தை பழையபடி 70 சதவீதமாக உயர்த்தி தர பிரதமரிடம் கோரியுள்ளோம். மத்திய அரசு மானியத்தை உயர்த்தி தரும்போது புதுச்சேரி வளர்ச்சி அடையும் என்று பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார்.

புதுடெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுநடந்தது. மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் வரவேற்றார். தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் முன்னிலை வகித்தார். தனியார் நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர் அருள்முருகன் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை இந்திரா காந்தி அரசுமருத்துவ கல்லூரிக்கு வழங்கி னார். இவ்விழாவுக்கு பேரவைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கி பேசுகையில், “புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட இன்னல்கள் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும். அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் அரசு முழுமையாக நிறைவேற்றித் தரும். புதுவைக்கு 3 முறை வந்துள்ள பிரதமர் வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்தி 'பெஸ்ட் புதுச்சேரி' உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.

அதற்கான முயற்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மேற்கொள்ளும்.

தற்போது புதுச்சேரி நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் மாநிலத்துக்கான மானியத்தை பழையபடி 70 சதவீதமாக உயர்த்திவழங்க வேண்டும் என்று பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு மானியத்தை உயர்த்தி வழங்கும்போது புதுவை வளர்ச்சி அடையும்” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT