தமிழகம்

மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய எண்ணெயை ‘பயோடீசல்’ தயாரிக்க வழங்கும் திட்டம் தொடக்கம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிப்பதில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் எரிபொருள் தயாரிக்க வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறது.

ஹோட்டல்கள், பேக்கரிகள், மால்கள், உணவுத் தொழிற்சாலைகளில் ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வகை நோய்கள் ஏற்படுவதாக உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய், மீண்டும் ஹோட்டல்களில், தெருவோரக் கடைகளில் சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க, அதிலிருந்து பயோடீசல் எரிபொருள் தயாரிக்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் இணைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிப்பதில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க வழங்கும் திட்டம் (RUCO) இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்லத்துரை, மதுரை மாவட்ட நியமன அலுவலர் வி.ஜெயராமபாண்டியன் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக நேற்று கோவிலில் ஒரு முறை பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெயை, கோயில் அதிகாரிகள் பயோடீசலாக மாற்றும் நிறுவனத்திடம் வழங்கினர்.

இதுகுறித்து உணவுபாதுகாப்புத் துறை மதுரை மாவட்ட நியமன அலுவலர் வி.ஜெயராமபாண்டியன் கூறியதாவது:

மதுரையில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்கும் திட்டம் கடந்த 2 ஆண்டிற்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மதுரையில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், மால்கள், உணவுத் தொழிற்சாலைகள் மற்றும் இதர உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் இணைந்துள்ளன.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயினால் ஏற்படும் நோய்களை இந்தத் திட்டத்தின் மூலம் தடுக்கலாம். இந்த எண்ணெய் வாங்குவதற்கு மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குறிப்பிட்ட விலைக்கு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து பயோடீசலாக மாற்றுகிறார்கள். இவ்வாறு தயாரிக்கப்படும் எரிபொருள் வானூர்தி மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

வியாபாரிகள் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை 1 லிட்டர் நிர்ணயித்த விலைக்கு கொடுப்பதால் பயன்பெறுகிறார்கள். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய், மீண்டும் தெருவோரக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT