தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு மார்ச் 2-ம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு கோரி, குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இது தொடர்பாக பி.ஆர்.பாண்டியன், நேற்று மன்னார்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினை களுக்கு தீர்வு காண வேண்டும். ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்கள் எண்ணெய், இயற்கை எரிவாயு குழாய்களை, விளை நிலங்களின் வழியாக பதிக்கும் பணியை, உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து தடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நடத்த வேண்டும். விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மார்ச் 2-ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த உள்ளோம். அதற்காக 26-ம் தேதி சென்னையில் இருந்து விவசாயிகள் ரயில் மூலமாக டெல்லிக்கு புறப்படுகின்றனர். இதற்காக பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.