வேடசந்தூர் அருகே வீட்டில் பதுக்கிவைத்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய மகப்பேறு உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி (58). இவர் கரூர் நகராட்சி கஸ்தூரிபா தாய்சேய் நல மையத்தில் அரசு மகப்பேறு உதவியாளராக பணிபுரிந்துவருகிறார். அங்கு பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்த வைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துவந்து அவரது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. புகாரின்பேரில் வேடசந்தூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
இதில், கரூர் தாய்சேய் நலமையத்தில் இருந்து தடுப்பூசி மருந்துகளை தெரியாமல் எடுத்துவந்து பொதுமக்களுக்கு செலுத்தியது தெரியவந்தது.
இது குறித்து, மருத்துவ அலுவலர் பொன்.மகேஸ்வரி கூறுகையில், "கரோனா தடுப்பூசிகளை மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவமனை அல்லது மருத்துவ முகாம்களில் தான் செலுத்த வேண்டும்.
இதுவரை 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அவர்களின் விபரத்தை பெற்றுள்ளோம். இவரது செயல் குறித்து, திண்டுக்கல், கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளேன். மேல் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் முடிவு செய்வர். தற்போது அவரிடமிருந்து 95 பேருக்கு போடக்கூடிய தடுப்பூசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இந்நிலையில், சுகாதாரப் பணிகள் துறை அதிகாரிகள் கரூர் நகராட்சி ஆணையாளருக்கு தனலட்சுமியை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்தனர். இதையடுத்து, தனலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து கரூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.