இணையம், எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்க வேண்டும். 4-வது தொழில்புரட்சிக்கு தயாராக வேண்டும் என்று தேசிய திறன்மேம்பாட்டு நிறுவனத் தலைவர் எஸ்.ராமதுரை கூறினார்.
சட்ட நிபுணர், பொருளாதார மேதை நானி பால்கிவாலா நினைவு சொற்பொழிவு சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடந்தது. இதில் ‘4-வது தொழிற்புரட்சிக்கு தயாரா?’ என்ற தலைப்பில் டிசிஎஸ் நிறுவன முன்னாள் துணைத் தலைவரும், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவன தலைவருமான எஸ்.ராமதுரை பேசியதாவது:
செல்போன் மூலமாகவே மருத்துவர்கள் நோய்களைக் கண்டறியும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது. ஆனால், மின்வசதியே இல்லாத கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றன. சூரிய மின்சக்தி மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளைவிட நாம் பின்தங்கியுள்ளோம். ஐபோன் அறிமுகமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ‘டச்’ போன், ஸ்மார்ட் போன் புழக்கம் இங்கு அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியை குறைக்க நமக்கு 4-வது தொழிற்புரட்சி தேவை. தொழிற்புரட்சியில் இந்தியா தன்னிறைவு அடைய ‘மேக் இன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
கணினி உலகில் தலைசிறந்தவர்கள் என்பதை இந்தியர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். பொருளாதார ரீதியாக நாம் வளம் பெற இணையம், எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும்.
ரோபோக்களின் ஆதிக்கம்
உலக அளவில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ரோபோக்கள் வருகையால் வேலைவாய்ப்பு பறிபோகாமல் இருக்க, இளைஞர்கள் தங்கள் தனித்திறன்களை வளர்த்து 4-வது தொழில்புரட்சிக்கு தயாராக வேண்டும். அதற்கு மனித வளம் மட்டும் போதாது. அறிவுசார்ந்த கல்வி, திறன் சார்ந்த நுட்பமும் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நானி பால்கிவாலா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் எஸ்.மகாலிங்கம் வரவேற்க, அறக்கட்டளை நிர்வாகி ஆர்.ஆனந்த் நன்றி கூறினார்.