பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துவரை, பாசிப் பயறு, உளுந்து, தட்டைப் பயறு, கொண்டைக்கடலை போன்ற பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பயறுவகைப் பயிர்கள் புரதச்சத்தின் அளவு, தானியங்களில் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது. பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதால், அவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்முடிச்சுகளில் நிலைநிறுத்தி மண்ணின் வளத்தை கூட்டுகிறது.
பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து, கோவை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்ட அறிக்கை:
கோவையில் பயறுவகைப் பயிர்களின் பரப்பை அதிகரிக்க, திருத்திய பயறுவகை சாகுபடி தொழில்நுட்ப முறையில் 1,500 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரும் ரகங்களையும், பூச்சி மற்றும் நோயை தாங்கி வளரக்கூடிய உளுந்து, பாசிப்பயறு, தட்டை, துவரை போன்ற விளைச்சல் தரும் பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம். விதை நேர்த்தி செய்ய ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகள், ரைசோபியம், பாஸ்போபேக்டீரியா, யூரியா அரிசி கஞ்சியுடன் கலந்து, பின்னர் விதைக்கலாம்.
ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகள் என்றளவில் பராமரிக்கலாம். தழை, மணி, சாம்பல் சத்துகளை 12.5:25:12.5 கிலோவாகவும், நுண்ணூட்டக் கலவை 5 கிலோவும், ஜிப்சம் 110 கிலோவும் ஒரு ஹெக்டேருக்கு ஒருங்கிணைந்த முறையில் இடவேண்டும். பயறு பூக்கும் தருணத்திலும், 15 நாள் கழித்தும் 2 சதவீதம் டிஏபி கரைசலை நீரில் கலந்து, பயிரில் சீராக தெளிக்க வேண்டும். பயறுவகைப் பயிர்களில் தண்ணீரை சிக்கனப்படுத்தி, குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் செய்ய தெளிப்பு நீர் பாசனம் அல்லது சொட்டு நீர் பாசனம் செய்யலாம். ஒருங்கிணைந்த முறையில் வெள்ளை ஈக்கள், அசுவினி, இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற தொழில்நுட்ப முறைகள் மூலம் பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெறலாம்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.