கூவம் ஆற்றின் முகத்துவாரத்தை ரூ.70 கோடி செலவில் திறந்த நிலையில் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் நுழையும் கூவம் ஆறு, பல்வேறு பகுதிகளில் மாசுபடுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூவம் ஆற்றின் முகத்துவாரம் கடல் மணலால் மூடப்பட்டுக் கிடப்பதால், கடல் அலைகள் கூவம் ஆற்றில் நுழைந்து அதன் தாக்கம் குறைக்கப்படுவதும் தடைபடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கடல் அரிப்பு ஏற்படுகிறது.
கடல் அலை கூவம் ஆற்றுக்குள் புகுந்து செல்லாததால், கூவம் ஆற்றில் உள்ள கழிவுநீர் ஒரே இடத்தில் நிலையாக தேங்கி, அவற்றில் கொசு உற்பத்தி அதிகமாகிறது. மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் அவற்றில் வாழ முடியாமல், அவற்றை உண்ணும் விலங்குகளும் இல்லாமல், உயிர்ச் சங்கிலி உடைபட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. முகத்துவாரம் அடைபட்டு கிடப்பதால், மழைக் காலங்களில் மழைநீர் கடலுக்கு செல்லாமல் கரையோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் கூவம் ஆற்றை சீரமைக்கக் கோரி சென்னையை சேர்ந்த எட்வின் வில்சன் தொடர்ந்த வழக்கை, தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூவம் ஆற்றின் முகத்துவாரத்தை திறந்த நிலையில் பராமரிப்பதற்காகவும், கடல் பரப்பிலிருந்து நேப்பியர் பாலம் வரை உள்ள 700 மீட்டர் நீள ஆற்றுப் பகுதியில் தூர் வாரவும் ரூ.70 கோடியில் பணிகள் மேற்கொள்ள அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அப்பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டலப் விதிகளுக்கு உட்பட்ட பகுதியில் வருவதால், அது தொடர்பான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். பணிகளைத் தொடங்க அவர்களின் ஆய்வறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.