செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அருகே பள்ளிஅகரம் பகுதியைச்சேர்ந்தவர் பிரியா ராணி(30) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது குழந்தைக்குஉடல்நிலை சரியில்லாததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை குழந்தைகள் நலப்பிரிவு வார்டு அருகே கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு தனியார் ஒப்பந்த ஊழியர் சுரேந்தர் (41) கட்டிட பணிகளை கவனித்து வந்தார். அப்போது பிரியா ராணியை பார்த்தவுடன் அவரது கைக்குழந்தையை பிடித்து வைத்துக் கொண்டு அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் தனக்கு இணங்கவில்லை எனில் குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் சுரேந்தரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து குழந்தையை மீட்டு அங்கிருந்து தப்பினார்.
மேலும் அந்த பெண்ணின் சத்தத்தை கேட்டு அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் சுரேந்தரை, தாக்கினர். இதில் அங்கிருந்து சுரேந்தர் தப்பி ஓடினார். இதுதொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் குழந்தைகள், பெண்கள் வார்டுகள் அருகே தனியார் ஒப்பந்த ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், முறையாக அவர்களை ஆய்வுக்கு உட்படுத்திய பின் பணியமர்த்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.