அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என ஆர்.பி.உதயக்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று திமுகவினர் கூறினர். ஆனால் தற்போது வாக்களித்த மக்களை வஞ்சித்துவிட்டனர். திமுகவின் அலட்சியத்தால் விவசாயிகள் ஏழ்மை நிலைக்கு வந்துவிடும் சூழல் உள்ளது.
அதிமுக தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போட்டு மலிவான அரசியலை திமுக செய்கிறது. அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது. அதிமுகவை சேதப்படுத்த நினைக்கும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.
லாட்டரி சீட்டு விற்பனையை கொண்டு வந்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.