இந்துக்கள் குறித்து பாதிரியார் அவதூறாகப் பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் கேரளாவிற்கு தப்ப முயன்றபோது போலீஸார் இன்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18 ஆம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்துக்கள், மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் குறித்தும், திமுக வெற்றி குறித்தும் கடும் விமர்சனம் செய்து, சர்ச்சைக் கருத்துக்களுடன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து இந்துக்கள், இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் மதப் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவான நிலையில் அருமனை போலீஸார் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளருமான ஸ்டீபன் ஆகியோர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னைக்கு மதுரை வழியாக காரில் தப்பி செல்ல முயன்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கருப்பாயூரணி பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்து குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செல்வம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவரை பாளையங்கோட்டை சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியான அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் தலைமறைவாகியிருந்தார்.
அவர் இன்று காலை கேரளாவிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது கேரள எல்லை பகுதியான காரோடு பகுதியில் தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டீபனை குழித்துறை அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு அங்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஸ்டீபன் தூத்துக்குடி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். ஸ்டீபன் மீது ஏற்ககெனவே மதப்பிரச்சினை தொடர்பாக காவல்நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்எனவே கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தனிப்படை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.